திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நடைபெற்ற தனது ஓட்டுனர் சாரதி பி.சி.துரை என்பவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படாமல் இருந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படை பயிற்சிக்கு எம்ஜிஆர் தடை விதித்தார்.
முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் தொண்டர் படையில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொண்டர் படைக்கு போலீஸ் கடும் கெடுபிடி விதித்தது. திமுகவின் தொண்டர் படை வீரர்கள் தற்போது அணிந்திருக்கும் கருப்பு சிவப்பு உடை என்னால் வடிவமைக்கப்பட்டது. நான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தேன். உயிரை கொடு என கலைஞர் கேட்டிருந்தால் அந்த நேரமே எனது மார்பை வாளால் கீறி உயிரை கொடுக்க தயாராக இருந்தேன். காரணம் என் மார்பை பிளந்து பார்த்தால் அதில் கலைஞர் தான் இருப்பார். இது நான் திமுகவில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பு நடந்தது.