விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் சொர்ணலெட்சுமி. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் ஆண் வாரிசு வேண்டும் என்று கணவர் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாக இருந்துவிடுமோ என்ற பயத்தில் சொர்ணலெட்சுமி குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளார். இது அவரது கணவர் முத்துக்குமாருக்கு பிடிக்கவில்லை, இனி ஆண் வாரிசைப் பெற முடியாது என்ற கோபம் அதிகரித்திருக்கிறது.
ஆண் வாரிசு இல்லையென சித்ரவதை! - கணவன் மீது புகார் - Male dominance
திருநெல்வேலி: ஆண் வாரிசு இல்லை என்று தனது கணவர் முத்துக்குமார் தன்னை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்வதாகவும், கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் பாதுகாப்புக் கேட்டு சொர்ணலெட்சுமி என்ற பெண் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்
அதன்பிறகு மது அருந்திவிட்டு வந்து அதிகமாக சித்ரவதை செய்ததால், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் துறையிலும் சொர்ணலெட்சுமி மனு அளித்துள்ளார். இந்நிலையில் குழந்தைகளைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி, முத்துக்குமார் அந்த மனுவை வாபஸ் வாங்க வைத்துள்ளார். குழந்தைகளுக்கு ஆபத்து என்பதால், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வந்து சொர்ணலெட்சுமி வசித்து வந்திருக்கிறார். அங்கேயும் வந்து வீட்டை அடித்து நொறுக்கி பிரச்னை செய்து, கொலை செய்ய முயற்சி செய்ததால், மூன்று பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சொர்ணலெட்சுமி கண்ணீர் மல்க மனு அளித்தார்.
இது குறித்துப் பேசிய சொர்ண லெட்சுமி, "எனக்கு ஆதரவு தரும், உடன்பிறந்த சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும் என் கணவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் என் மூன்று பெண் குழந்தைகளுடன் பலமுறை தற்கொலை முயற்சி செய்தேன். ஆனால் பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து அந்த முயற்சியை கைவிட்டு விடுவேன். எனது பிள்ளைகள் நன்றாக படிக்கக் கூடிய பிள்ளைகள், எனது கணவரின் தொந்தரவு இல்லாமல் எனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என ஆட்சியரிடம் பாதுகாப்பு கேட்டு வந்துள்ளேன்" என தெரிவித்தார்.