திருநெல்வேலி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்கள் அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் திருநெல்வேலியில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய திருநெல்வேலி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, “குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கும் மக்களைப் பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாடி வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியேற மாட்டோம் என வீடுகளுக்குள்ளேயே உள்ளனர். மக்களைப் பத்திரமாக மீட்டு அழைத்துச் செல்வதற்குத் தேவைக்கு அதிகமான அளவிலேயே படகுகள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் விவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திருநெல்வேலி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் 3 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது” என்றார்.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “திருநெல்வேலி மாவட்டத்தில் 36 கிராமங்கள், 2 பேரூராட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் தண்ணீருடைய வேகத்தின் காரணத்தால் தாமிரபரணி உடன் இணையக் கூடிய ஆறுகளிலிருந்து வரக் கூடிய நீரின் மூலமும், அதிகரித்துவரும் மழை நீரின் மூலமும் தாமிரபரணியின் வேகம் அதிகரித்து நிறைய இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மழைப்பொழிவு இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற மக்கள் முதலில் வெளியேற வேண்டும் எனத் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், மக்கள் பலவித காரணங்களால் அங்கேயே இருப்பதால் சில சிரமங்களை நாம் இன்று சந்தித்துள்ளோம். இருந்தாலும் கூடுமானவரை அனைவரையும் வெளியேற்றி வருகிறோம். தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் தண்ணீரைக் கடக்க முயற்சிக்க வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.