திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை கற்களால் உடைத்தும், பிடுங்கியும் சித்திரவதை செய்ததாக ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, பல் பிடுங்கிய வழக்கு விசாரணை, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி சங்கர் தலைமையிலான போலீசார், நான்கு வெவ்வேறு புகார்களின் அடிப்படையில், நான்கு வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள், அம்பாசமுத்திரம் உட்கோட்ட பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, நெல்லை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.