திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாளொன்றுக்கு 500 முதல் 800 பேர் வரை, பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த கட்டமாக வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என்ற பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்து அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அதனடிப்படையில் கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொள்ளும் வகையில் 45 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று சோதனைகள் நடத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறைப் பணியாளர்கள், மருத்துவர்கள் கரோனா தடுப்பு உடைகள் அணிந்து வீடு வீடாகச் சென்று மக்களிடம் கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும், பரிசோதனையின்போது அவர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளான கபசுரக் குடிநீர், காய்ச்சல் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளும் முன்கூட்டியே வழங்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.