நெல்லைஅருகே மானூர் ரஸ்தாவைச் சேர்ந்தவர் மீசை முருகேச பாண்டியன். நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செல்லும் அரசுப்பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
பேருந்து சாத்தான்குளம் முன்பாக கருங்கடல் வந்தபோது, திடீரென மீசை முருகேச பாண்டியனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனாலும், பேருந்தில் இருந்த சுமார் 50 பயணிகள் ஒவ்வொருத்தரும் தேவைக்காக அவசரமாக செல்வார்கள் என்பதால் சாத்தான்குளத்தில் அவர்களை இறக்கிவிட்டு, பிறகு நெஞ்சு வலியை பரிசோதித்துக் கொள்ளலாம் என்று எண்ணியுள்ளார்.
பின்னர், நெஞ்சு வலியோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சுமார் 10 கி.மீ தூரம் சாத்தான்குளம் சென்று அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, அதன் பிறகே ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், சிகிச்சைப் பலனளிக்காமல் ஓட்டுநர் மீசை முருகேச பாண்டியன் மாரடைப்பால் உயிரிழந்தார்.