திருநெல்வேலி:மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (45). டெய்லர் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தங்கவேணி (12) அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்கவேணிக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மூலக்கரைபட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரை, அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் போதிய வசதி இல்லாததால் அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி தங்கவேணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே சிறுவர் சிறுமிகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக நெல்லை மாநகரம் தச்சநல்லூரில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவருக்கு மலேரியா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இது போன்ற நிலையில் மர்ம காய்ச்சலால் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க வாட்ஸ் அப் குரூப்