திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் சரக காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கி துன்புறுத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில், நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற இரண்டாம் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கி, முத்து, அருண் குமார், வேத நாராயணன், சுபாஷ். எம்.மாரியப்பன் மற்றும் 2 சிறார்கள் உள்பட 10 பேர் ஆஜராகி இருந்தனர்.
நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை, நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. தொடர்ந்து, நேற்று 7 பேரை விசாரித்து முடித்த நிலையில், இரவு 12 மணிக்கு விசாரணை அதிகாரி அமுதா, தனது விசாரணையை முடித்துக் கொண்டார். இதனால் வேத நாராயணன், எம்.மாரியப்பன் மற்றும் சுபாஷ் ஆகிய மூன்று பேரிடம் மட்டும் நேற்று விசாரணை நடத்த முடியாததால், இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரி அமுதா கூறி இருந்தார்.
இதன் அடிப்படையில், இன்று இரண்டாவது நாள் விசாரணை நடைபெற்றது. இதற்காக காலை 10.40 மணிக்கு விசாரணை அதிகாரி அமுதா, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று நேரமின்மையால் ஆஜராகாத 3 பேரும், தங்களது வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். இதில், முதலில் மாரியப்பனிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து வேத நாராயணன் மற்றும் சுபாஷ் ஆகிய இருவரிடமும், அதிகாரி அமுதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் விசாரணை நடைபெறும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திடீரென வந்துள்ளார். மாவட்டத்தின் பொறுப்பு அதிகாரி என்ற முறையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், விசாரணை அதிகாரி அமுதா சில விளக்கங்களை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இன்று மாலையுடன் 2ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற உள்ளது.