திருநெல்வேலி: நாங்குநேரியில் சாதிய மோதலால் 12ஆம் வகுப்பு படிக்கும் பட்டியலின பள்ளி மாணவன் ஒருவன், சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அம்மாணவனுக்கு பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் சாதிய ரீதியான பாகுபாடு காட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாக்கப்பட்ட பட்டியலின மாணவரின் தாய் பள்ளியில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள், பட்டியலின மாணவனை ஆயுதத்தால் கொடூரமாக தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அரசு சார்பில் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பலர் நேரில் வந்து மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாணவனை தாக்கிய சக மாணவர்களின் பெற்றோர் சிலர் திமுகவில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: நாங்குநேரி மாணவன் சின்னதுரைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை வெற்றி - சென்னை ஸ்டான்லி மருத்துவ குழுவினர் தகவல்!
இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் விதமாக, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்திற்கு காரணமான மாணவர்களின் பெற்றோர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என ஒரு பொய்யான குற்றச்சாட்டை மாநில பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதார்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார் என்பது அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் தெரிந்தது ஒன்று என்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் குறிப்பிட்டு இருந்தார்
"ஆனால் இதையெல்லாம் மறைத்து விட்டு திமுகவிற்கும், திமுக நிர்வாகிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்புவது அருவருக்கத்தக்க செயல் ஆகும். இதை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வன்மையாக கண்டிக்கிறது. இனிமேல் இது போன்ற நேரங்களில் ஆதாரம் இல்லாத தகவல்களை வெளியிடுவது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகு இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஆளுநரின் பிடிவாதம் 2 உயிர்களை பலி வாங்கி உள்ளது, ஆளுநர் மனம் இரங்க வேண்டும் - தொல்.திருமாவளவன்