திருநெல்வேலி:மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்து விபரங்கள் குறித்து தகவல்களை கேட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா தனது மனுவில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்து எத்தனை நாட்களுக்குள் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது?
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முடக்கம் செய்யப்படாத சொத்துக்கள் என்னென்ன? முடக்கம் செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் விபரங்கள், அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள்” உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஆட்சியர் அலுவலகம் அனுப்பிய பதிலில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தி வருவதால், தற்போது தகவல் ஏதும் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.