தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் இன்று (டிச.17) மதியம் முதல் நாளை (டிச.18) காலை வரை நெல்லை மாவட்ட கடலோரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று காலை நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாஞ்சோலை எஸ்டேட் பகுதி மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் அதிகபட்சமாக 190 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
மேலும், ஊத்து பகுதியில் 169 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதியில் 152 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 135 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணை, சொரிமுத்தையனார் கோயில் மற்றும் அகஸ்தியர் அருவிகளுக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கைக் கடல் பகுதியில் நீடித்த காற்று சுழற்சி, தற்பொழுது மெதுவாக குமரி கடலை நோக்கி நகர்கிறது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை பெய்யத் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதினால், நெல்லை மாவட்டத்தின் பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது நாளை அதிகாலை, மலைப்பகுதியான மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் அதிகபட்சமாக 30 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதலே நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. 143 அடி கொள்ளளவு உள்ள பாபநாசம் அணையில், அதிகாலை நிலவரப்படி 125 அடி தண்ணீர் உள்ளது. விநாடிக்கு 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
118 அடி கொள்ளளவு உள்ள மணிமுத்தாறு அணையில், தற்பொழுது 85 அடி தண்ணீர் உள்ளது. இதற்கிடையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை கொட்டி வருவதால், பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், காட்டாற்று வெள்ள நீரும் ஆற்றில் கலக்கும் என்பதால், தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 3,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது படிப்படியாக 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கலாம். எனவே, தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணை தொடர்ந்து கொண்டு, கட்டுப்பாடு மையத்திற்கோ அல்லது 1070 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கோ தெரிவிக்கலாம் எனவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான உதவிக்கு 101 மற்றும் 112 தொலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!