திருநெல்வேலி: தாழையூத்து அடுத்த தென்றல் நகரைச் சேர்ந்தவர் முருகன் என்ற முருகானந்தம். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரது மனைவி நேற்று (அக்.25) உறவினர் வீட்டுக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு வீடு திரும்பிய அவர், முருகானந்தம் முகம் சிதையப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்ததைக் கண்டு கூச்சலிட்டுள்ளார்.
இவரது சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்ற அக்கம்பக்கததினர், இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம், அரங்கேறிய இடத்தில், ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையிலான காவல்துறையினர் தடயங்களை சேகரித்து கொலைச் சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர். பின்னர் இது குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் உறவினர் மீது பெண் புகார்!