கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில, மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், அனைத்தும் மூடப்பட்டு அத்தியாவசியப் பொருள்களான பால், மளிகை, காய்கறிகள் தங்குத்தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஊரடங்கு உத்தரவு காரணமாக சிலர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு திருவண்ணாமலை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிழைப்புத் தேடி நெல்லைக்கு வந்துள்ளனர்.
சிந்துபூந்துறை அருகே தாமிரபரணி நதிக்கரையோரம் குடில் அமைத்து இவர்கள் வசித்துவந்தனர். இவர்கள் ஒவ்வொரு மாதமும், ஊர் ஊராகச் சென்று ஆற்றில் மணல் அரிப்பது, கூலி வேலையில் ஈடுபடுவது போன்றவைகள் மூலம் வருவாய் ஈட்டி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
உதவிக்கரம் நீட்டிய நெல்லை நிர்வாகத்துக்கு ஈடிவி பாரத் நன்றி!
ஊரடங்கு உத்தரவால் வேலை பாதிக்கப்பட்ட நிலையில், அன்றாட உணவுக்கு அல்லல்படும் நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டனர். சில தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்களை வழங்கினாலும், போதுமான அளவு இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர் இந்த மக்கள். இதுதொடர்பாக செய்தி நமது ஈடிவி பாரத் இணையதளத்தில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, நெல்லை மாநகர துணை காவல் ஆணையர் சரவணன் நடவடிக்கையின் பேரில், மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடோடி இனமக்களைக் கண்டறிந்து கணக்கெடுக்கப்பட்டது. குழந்தைகள் உள்பட மொத்தம் 19 குடும்பத்தினருக்கு, 10 கிலோ அரிசி, ரூ.1000 மதிப்புள்ள மளிகை, காய்கறிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுருநாதன் நேரில் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, நாடோடி இனமக்கள், ஈடிவி பாரத் செய்தி வாயிலாக தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைத்துள்ளதாகவும், அதற்கு ஈடிவி பாரத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!