திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்தன. அதில், அந்த நேரத்தில் பணியில் இருந்த ஆறு ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமான மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் சிக்கிய ஆறாவது நபர் நேற்று இரவு மீட்கப்பட்டதுடன் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றன. இந்நிலையில், இன்று காலை குவாரி பகுதியை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர், “அடைமிதிப்பான்குளம் தனியார் குவாரியில் நடந்த நிலச்சரிவு விபத்தில் 8 நாட்கள் மீட்புப்பணி நடத்தப்பட்டு, 6 நபர்கள் மீட்கபட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த 5 மணி நேரத்தில் இந்திய கடற்படை தளம் ராமேஸ்வரத்திலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.
சிறப்புக்குழு:மேலும் கூடங்குளம், எல்.என்.டி ஆகிய இடங்களில் இருந்தும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. இந்த விபத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புக்குழுவில் பிற மாவட்ட அலுவலர்கள் இடம்பெறுவார்கள்.