திருநெல்வேலி:பாளையங்கோட்டை மறை மாவட்டம் சார்பில் திருநெல்வேலி சமூக சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் பொன்விழா கொண்டாட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் மறைமாவட்ட ஆயர் அருட்திரு அந்தோணிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விழாவில் பொன்விழா மலரை பேராயர் அந்தோணிச்சாமி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு பேசுகையில், ’இந்த சமூகம் முன்னர் எப்படி இருந்தது என்பது தெரியாது, அதன் தொடர்ச்சி இன்று தொடர்கிறது. ஆரம்ப காலத்தில் எல்லோரும் நிலம் வாங்க முடியாது. அனைவருக்கும் கல்வி என்பது இல்லை. தலையில் துண்டு அணிந்து செல்ல முடியாது. குழந்தைத் திருமணம் என பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், அடிமைத்தனம் இருந்து வந்தது.
இந்தநிலையில் லாடுமெக்காலேபிரபு, எனிகார்ல்மைக்கேல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டது. அனைவருக்கும் அனைத்து உரிமையும் உண்டு என்பதற்காக குரல் கொடுத்தவர்கள் இவர்கள். கிறிஸ்தவ சபையால் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால், இன்று கிறிஸ்தவ சபையை இழிவுபடுத்தும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பழைய வரலாற்றை முந்தைய சமுதாய நிலையை, தற்போது வரும் சந்தியினருக்குச்சொல்லவேண்டும். பெண்கள் அதிகம் படிப்பதற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் காரணம். இன்று அதன் தொடர்ச்சியாக இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி, பெண்கல்வியை ஊக்குவித்து வருகிறார்.