திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவு காலை முதல் உள்ளது.
நெல்லை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்டோர் இணைந்து பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் சராசரியாக 28 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 45 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதலாகத் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அணையில் கூடுதல் தண்ணீர் திறந்தால், மிக வேகமாக ஆற்றில் தண்ணீர் வரும் என்பதால், கரையோர மக்களை வெளியேற்றத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்க, தயார் நிலையில் பேரிடர் மையம் செயல்பட்டு வருகிறது. ஆயிரத்து 200 பேர் தற்போது வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 100க்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரங்கள் மழை பாதிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் நிலவரம் கட்டுக்குள் உள்ளது. கரையோர மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரையோர மக்கள் தானாக முன்வந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல, மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இடர்பாடுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளதன் அடிப்படையில், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆற்றில், மற்ற பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரும் சேர்ந்து 60 ஆயிரம் கன அடி வரை செல்ல வாய்ப்புள்ளது. நெல்லையில் 123 மின்மாற்றிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக அணைத்து வைக்கப்பட்டுள்ளன. மூலக்கரைப்பட்டி பகுதியில் அதிக கன மழை பெய்துள்ள சூழலில், அங்குள்ள துணை மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து பெண்கள் குழந்தைகள் வெளியேறிய நிலையிலும், ஆண்கள் வெளியேற மறுக்கிறார்கள். அவர்களையும் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு பச்சையாறு, கொடுமுடி ஆறு, நம்பியார் உள்ளிட்ட அணைகளில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் மூலம் 33 ஆயிரம் லிட்டர் பால் நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் நிலையில், கூடுதலாக இரண்டு டேங்கர்களில் பால் மதுரையில் இருந்து கொண்டுவரப்படுகிறது. இரண்டு டன் பால் பவுடரும் நெல்லை மாவட்டத்திற்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.