தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத போதகர் மீது தாக்குதல்: திமுக எம்.பி.க்கு வந்த ஓலை - பரபரப்பான பின்னணி?

நெல்லையில் மதபோதகரை தாக்கிய விவகாரத்தில் திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகக் கூறி திமுக தலைமை எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

dmk
திருநெல்வேலி

By

Published : Jun 27, 2023, 1:57 PM IST

Updated : Jun 27, 2023, 5:14 PM IST

திருநெல்வேலி:எம்.பி. ஞானதிரவியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நெல்லை திருமண்டல திருச்சபையின் கீழ் இயங்கும் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராகவும், நெல்லை திருமண்டல உயர்கல்வி நிலை குழு செயலாளராகவும் ஞானதிரவியம் எம்.பி. பதவி வசித்து வந்தார். திருச்சபையின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் உட்பட பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.

திருச்சபைகளில் கோஷ்டி மோதல்:எனவே, நிர்வாக ரீதியாக திருமண்டல திருச்சபையில் ஏற்கனவே பலர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்வி நிறுவனங்கள் மூலம் திருச்சபைக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. எனவே, நிர்வாகத்தில் அரசியல் பின்னணி கொண்ட சிலர் முக்கியப் பதவிகளை அடைய வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது திருமண்டல திருச்சபையின் பேராயர் பர்னபாஸ் ஒரு பிரிவாகவும், எம்.பி. ஞான திரவியம் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திருச்சபைக் கூட்டத்தில் எம்.பி. ஞானதிரவியம் சக நிர்வாகிகளை தரக்குறைவாக திட்டியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

அதாவது, திருச்சபையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக எழுந்த புகாரில் தவறு செய்த ஆசிரியருக்கு ஆதரவாக திருச்சபை பேராயர் பர்னபாஸ் செயல்படுவதாகக் கூறி, எம்.பி. அந்தக் கூட்டத்தில் ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.

தொடங்கிய கோஷ்டி மோதல்: ஏற்கனவே எம்.பி. மீது பர்னபாஸ் கோபத்தில் இருந்த நிலையில், மேற்கண்ட கூட்டத்தைக் காரணம் காட்டி எம்.பி. ஞானதிரவியத்தை கல்லூரி தாளாளர் உள்பட திருச்சபை நிர்வாகப்பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கினார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எம்.பி. ஆதரவாளர்கள் கடந்த 3 தினங்களாக பாளையங்கோட்டையில் உள்ள திருச்சபை அலுவலகத்தில் பேராயர் ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஞானதிரவியத்தை பொறுப்புகளில் நீக்க பேராயருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நேற்று பேராயருக்கு ஆதரவாக மத போதகர் காட் பிரே நோபல் என்பவர் திருமண்டல திருச்சபை அலுவலகத்தில் வைத்து குரல் கொடுத்து கொண்டிருந்தார்.

பளார் விட்ட எம்.பி. ஆதரவாளர்:அப்போது எம்.பி. ஞான திரவியம் அலுவலகத்திற்கு உள்ளே இருந்தார். வெளியே எம்.பி.யின் ஆதரவாளர்கள் மதபோதகர் காட் பிரே நோபலிடம் வாக்குவாதம் செய்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டத்தில் இருந்த எம்.பி. ஆதரவாளரான வழக்கறிஞர் ஜான் மதபோதகர் காட்பிரே நோபலை கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

அதன் பின்னர் காலால் உதைத்தும் ஓட ஓட விரட்டியும் திருச்சபை அலுவலகத்தில் இருந்து மத போதகரை துரத்தினர். இந்த காட்சி நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் எம்.பி. ஆதரவாளர்கள் தாக்கியதில் காயமடைந்த மதபோதகர் காட்பிரே நோபல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவரது புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் சம்பவம் தொடர்பாக எம்.பி. ஞான திரவியம், வழக்கறிஞர் ஜான் உள்பட 33 பேர் மீது 147, 294 பி, 323 உள்பட நான்கு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் எம்.பி. ஞான திரவியம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் மத போதகரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வழக்கறிஞர் ஜானை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எம்.பி.யை கண்காணிக்கும் உளவுத்துறை?:எம்.பி. மற்றும் எம்.பி. ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் உளவுத்துறை போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு திமுக தலைமைக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே செந்தில் பாலாஜி விவகாரத்திற்குப் பிறகு ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

எனவே, திமுக நிர்வாகிகளால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. எனவே எம்.பி. ஞானதிரவியம் ஆரம்பம் முதல் நேற்று நடந்த மோதல் வரை அனைத்தையும் உளவுத்துறையினர் ரிப்போர்ட் ஆக கொடுத்துள்ளனர் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

கலெக்டரையே மிரட்டியவர்: இதுதவிர தொழில் ரீதியாகவும் எம்.பி. ஞானதிரவியம் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ஆவரைகுளம் தான் எம்.பி. ஞான திரவியத்துக்கு சொந்த ஊராகும். பணகுடி, ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் எம்.பி.க்கு பல்வேறு கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இது தவிர காற்றாலை தொழிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்தாண்டு திருநெல்வேலி அருகே நடந்த கல்குவாரி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது திருநெல்வேலி ஆட்சியராக இருந்த விஷ்ணு அதிரடி நடவடிக்கை எடுத்து கல் குவாரியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அனைத்து கல்குவாரிகளின் நடவடிக்கைகளும் அவரது உத்தரவால் நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த எம்.பி. ஞான திரவியம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை வெளிப்படையாக மிரட்டி இருந்தார். அந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது.

எனவே இது போன்ற அடுத்தடுத்து மக்கள் மத்தியில் திமுக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தால் தற்போது கட்சி தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் விரைவில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி இல்ல.. அவரு 10 ரூபாய் பாலாஜி" - பிரேமலதா விஜயகாந்த் சாடல்!

Last Updated : Jun 27, 2023, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details