திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று (டிச. 30) நடைபெற்றது. நெல்லை மாநகராட்சி பொருத்தவரை மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று மெஜாரிட்டியாக உள்ளது. இருப்பினும் நெல்லை மாநகர திமுகவில் நிலவி வரும் உள்கட்சி பூசல் காரணமாக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை அவமரியாதையாக பேசும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக மாமன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக கோஷம் எழுப்புவதும் மேயரை கண்டித்து போராட்டம் நடத்துவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்ற மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் சுதா என்பவர் மேயர் சரவணனை பார்த்து கேள்வி மேல் கேள்வி எழுப்பி திணறடிக்க செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் சுதா பேசும்போது, “எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. முதலில் எங்களுக்கு மரியாதை கொடுங்க. சார் பணம் எங்களுக்கு முக்கியமில்லை. பணத்துக்காக நாங்கள் இங்கே வரவில்லை. இங்குள்ள பெண் கவுன்சிலர்கள் எல்லாரும் புதிதாக வந்தவர்கள். ஏதோ சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தோம். ஆனால், எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. முதலில் எங்களை உட்கார சொல்லாதீர்கள். நாங்கள் பேசுவதை கேளுங்கள். அதற்காகத்தான் உங்களை வைத்துள்ளோம்.