தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் வெறும் மூன்று பேர், நான்கு பேர் மட்டுமே உயிரிழப்பதாக கணக்கு காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மொத்தம் 1,240 படுக்கை வசதிகளுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 800க்கும் மேற்பட்ட படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் தினசரி ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைக் கல்லூரியில் 19 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்புக் கிடங்கு உள்ளது.