திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பக்கத்து மாவட்ட நோயாளிகளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாள்தோறும் 2,000-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமார் 1,000 படுக்கை வசதி கொண்ட பெரிய மருத்துவமனையாகும். ஆனால் சமீபகாலமாக இங்கு பொதுமக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் மிக தாமதம் ஏற்படுவதால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பசி பட்டினியோடு கால்கடுக்க காத்து கிடக்கும் அவலம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழைய கட்டடம், புது கட்டடம் என இரு பிரிவுகளாக மருத்துவமனை இயங்கி வரும் நிலையில் பழைய கட்டடத்தில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் தான் பெரும்பாலான ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது.
இதற்காக மூன்று கவுன்டர்கள் இருந்தாலும் கூட பெரும்பாலும் ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 1,000 நோயாளிகளின் ரத்த மாதிரிகள் வாங்கப்படுகிறது. தற்போது நவீன தொழில்நுட்பம் காரணமாக அதிகபட்சம் மூன்று மணி நேரத்துக்குள் அனைத்து விதமான பரிசோதனை முடிவுகளையும் வழங்க முடியும்.