மாமியாரை கொலை செய்த மருமகள் திருநெல்வேலி: சீதபற்பநல்லூர் அருகே உள்ள துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (63). இவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி சீதாராமலெட்சுமி (58). இவர்களுக்கு ஒரு மகளும், ராமசாமி என்ற மகனும் உள்ளனர். ராமசாமிக்கு மகாலெட்சுமி (27) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலைலையில், நேற்று (மே 29) நள்ளிரவு சீதாராமலெட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் சீதாலெட்சுமியை சரமாரியாக தாக்கிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 அரை சவரன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றார். சீதாலெட்சுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சென்று சீதாலெட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வீட்டில் சோதனை செய்தனர். பின்னர், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்த வாறு வீட்டில் நுழைவதை கண்டனர்.
பின்னர், அந்த காட்சியை உற்று பார்க்கையில் வீட்டிற்குள் புகுந்தது இளைஞர் இல்லை அது ஒரு பெண் என தெரியவந்தது. தொடர்ந்து, காவல் துறையினர் யார் அந்த பெண், ஆண் வேடத்தில் கொள்ளையடித்தது என தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் பாதிக்கப்பட்ட சீதாராமலெட்சுமியின் மருமகள் மகாலெட்சுமி என தெரியவந்தது.
தொடர்ந்து, மகாலெட்சுமியை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சீதாராமலட்சுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், அந்த வழக்கை காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றி, மகாலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியதாவது, “ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார் - மருமகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்களிடையே பிரச்னையை போக்குவதற்காக சண்முகவேல் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறத்தில் புதிதாக ஒரு வீட்டை ராமசாமிக்கு கட்டி கொடுத்துள்ளார்.
ஆனாலும், மகாலெட்சுமி அடிக்கடி மாமனார்-மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது அக்கம்பக்கத்தினர் வந்து சமாதானம் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மகாலெட்சுமி, தனது மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இதையடுத்து நேற்று அதிகாலை சீதாராமலெட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் மகாலெட்சுமி வீட்டிற்குள் சென்று மாமியாரை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், காவல் துறையினரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, மாமியாரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அதாவது, நகைக்கு ஆசைப்பட்டு திருடர்கள் மூதாட்டியை கொலை செய்திருப்பார்கள் என காவல் துறையினரை திசை திருப்பும் நோக்கோடு மகாலட்சுமி இந்த நகை பறிப்பு நாடகத்தை போட்டுள்ளார். காவல் துறையினர் வீட்டுக்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தபோது, அதில் மகாலெட்சுமி தான் மூதாட்டியை தாக்கிவிட்டு செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும், தன்னை திருடனாக காட்டிக் கொள்வதற்காக மகாலட்சுமி ஆண் அணியும் பேண்ட் சட்டையை அணிந்துகொண்டு தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை எளிதில் கண்டறியப்பட்டது” என தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் மகாலெட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மகளிர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மிளகாய்பொடி தூவி ரூ.1.5 கோடி அபேஸ்.. நெல்லையில் நடந்த சினிமா பாணி கொள்ளை