திருநெல்வேலி:சமீபத்தில் அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக, சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்தது.
இந்த அதி கனமழை காரணமாகத் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து, ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுமட்டும் அல்லாது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் பாடப் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அந்த சமயத்தில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வு கடந்த வாரம் தான் நடைபெற்று முடிந்தது. கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கொட்டித்தீர்த்த அதிக கனமழை காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு, உடற்கல்வியில் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதிக்குப் பிறகு ரத்து செய்யப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழையால் ரத்து செய்யப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என்றும் ஜனவரி 4 முதல் 11ஆம் தேதி வரை பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவ மாணவிகளுக்கு விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.. அப்படியென்ன என்ன ஸ்பெஷல்..?