திருநெல்வேலி: உவரி அடுத்த கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முத்துக்குட்டி. இவரது மகள் ஷர்லிபிரமில்டா (19). இவர், திடியூர் அருகேவுள்ள தனியார் கல்லூரியில் கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை, கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் 450க்கும் மேல் மதிப்பெண் எடுத்ததால் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் தங்களது கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதாக கல்லூரி தரப்பில் கூறியுள்ளனர்.
அந்த அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவி நேற்று (ஏப்.28) கல்லூரி முதல்வர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் அலுவலகம் இருந்த முதலாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதில் இடுப்பு மற்றும் கால் எலும்புகள் உடைந்து தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்தும், தற்கொலை முயற்சி குறித்தும் முன்னீர்பள்ளம் காவல் நிலைத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் மாணவியை சந்தித்து கேட்டபோது, “12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால், கட்டணம் எதுவும் வேண்டாம் என்ற அடிப்படையில் இந்த கல்லூரியில் என்னை சேர்த்தார்கள். ஆனால், முதல் செமஸ்டர் முடிந்ததும் ஹாஸ்டல் கட்டணம் என 18 ஆயிரம் ரூபாயும், செமஸ்டர் கட்டணமாக 5 ஆயிரம் ரூபாயும் கட்ட சொன்னார்கள். என்னால் முடியாது என்று சொன்னேன். என்னை இந்த கல்லூரியில் சேர்ப்பதற்கு அனுமதியளித்த ஆசிரியரை அழைத்துவரச் சொன்னார்கள். ஆசிரியர் கூறியதன் அடிப்படையில் அப்போது அந்த பிரச்னை ஒரு தற்காலிக முடிவுக்கு வந்தது.
அதன் பின்னர், கல்லூரி முதல்வரின் உதவியாளர் சிவா என்பவர் என்னை அடிக்கடி பின் தொடர்ந்து வந்தார். எனது செல்போன் எண்ணை கேட்டார். என்னுடன் செல்போனில் பேசினால் கல்லூரிக்கான கட்டணம் ஏதும் கட்டவேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறினார். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அப்போதைக்கு மட்டுமே நடவடிக்கை எடுத்தார். அடுத்த சில நாள்களில் மீண்டும் சிவா மூலம் எனக்கு தொந்தரவு தொடங்கியது. கல்லூரியில் மற்ற சகோதரரிடம் பேசினால் தவறாக என்னை சித்தரித்து கல்லூரி முதல்வரிடம் சிவா புகார் அளித்துள்ளார்.