திருநெல்வேலி:தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக, அதிக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி 17ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது.
அப்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், இந்த ரயில் பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதோடு, வெள்ளத்தால் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில், ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, மொத்தம் உள்ள 22 பெட்டிகளில் சுமார் 800 பயணிகள் என மூன்றாவது நாளாக இன்றும் ரயிலுக்குள் பயணிகள் தவித்து வருகின்றனர்.
ரயில் நிலையத்தை சுற்றிலும் மழை வெள்ளம் சூழ்ந்து சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் யாரும் அங்கிருந்து வெளியேற முடியாமலும் வெளியே இருந்து யாரும் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலையும் நீடித்து வருகிறது.