தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கரோனா பொருளாதாரம் நிவாரணமாக மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும், பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வலியுறுத்தி நூதன போராட்டம்!
நெல்லை: பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு பொங்கலிட்டு ஆட்டோ தொழிலாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் திருமால் நகர் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் பொங்கலிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு, உபகரணங்கள் வழங்கியதை போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் உபகரணங்கள், பொங்கல் சிறப்பு தொகுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு வழங்க தவறும்பட்சத்தில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆட்டோ தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.