தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செப்.24 முதல் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்! - திருநெல்வேலி மாவட்ட செய்தி

Nellai Vande Bharat Express: தென் தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில், நெல்லை - சென்னை இடையே வரும் 24ஆம் தேதி இயக்கப்படுகிறது. இதனை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:22 PM IST

நெல்லை: வந்தே பாரத் என்று அழைக்கப்படும் அதிவிரைவு ரயில்களின் என்ஜின்கள் தமிழ்நாட்டில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில்போல் அதிவேகத்தில் இயங்கும் தன்மை கொண்டவை. இதனால் வந்தே பாரத் ரயில்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த ரயிலில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னை- மைசூர் ஆகிய இடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகவும், தென் தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை - சென்னை இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை வருகிற 24ஆம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான முன்னேற்பாடு பணிகளை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை வணிக மேலாளர் ரவி பிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவிற்கான மேடை அமைக்கும் இடம், ரயில் வந்து செல்லும் நடைமேடை, ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக்கூடிய பிட் லைன், ரயில்வே முன்பதிவு கவுண்டர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், ”நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகிற 24ஆம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு தென்னக ரயில்வேக்கு கிடைக்கப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தொடக்க விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நெல்லை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 9 ரயில்களை பிரதமர் காணொலிக் காட்சி வாயிலாக வருகிற 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதில் நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலும் ஒன்று. இந்த ரயில் முதற்கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நடைபெறும் தொடக்க விழா காணொலிக் காட்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை புணரமைக்கும் பணிக்கான திட்ட வரையறை தயார் செய்யப்பட்டு, வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்

இதையும் படிங்க: கூடங்குளத்தில் தரைதட்டிய மிதவை கப்பல்; தரை மார்க்கமாக கொண்டு வர முடிவு!

ABOUT THE AUTHOR

...view details