நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2011ஆம் ஆண்டில் இடிந்தகரை அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தங்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இளைஞர்கள் அரசு வேலைகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும், வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 213 வழக்குகள் மட்டும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது. இருப்பினும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர், களக்காடு, சேரன்மகாதேவி, நெல்லை டவுன் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு, தென்காசி மாவட்டம் சென்றார்.
தென்காசி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று இரவு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் உதயகுமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, கூடங்குளம் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்.