நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகிலுள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ, அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர் திருநெல்வேலி:நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் இருக்கும் போக்குவரத்து சிக்னலில், அரசுப்பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, அதன் பின்னால் ஆட்டோ மற்றும் சொகுசு கார் ஆகியவையும் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், நெல்லை - வண்ணாரப்பேட்டையில் இருந்து சந்திப்பு நோக்கி சிக்னல் அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ, சொகுசு கார் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது அரசுப் பேருந்து, சொகுசு கார் மற்றும் தனியார் பேருந்துக்கு இடையில் சிக்கிய ஆட்டோ விபத்தில் கடும் சேதம் அடைந்துள்ளது. இதில் ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் மற்றும் பத்து பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து மோதிய தனியார் பேருந்தின் முன்பகுதியும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்த காவல் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், அவர்களை சரமாரியாக தாக்கியதுடன், இந்த நிறுவனத்தின் பேருந்துகள்தான் அடிக்கடி திருநெல்வேலி மாநகரத்தில் விபத்தை ஏற்படுத்துவதாகக் கூறி இருவரையும் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல், ஓட்டுநர் பேருந்தை இயக்கியது தெரிய வந்துள்ளது.
மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் குடித்து விட்டு வாகனத்தை இயக்கினார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, காயம் அடைந்தவர்களை மீட்பதற்காக அரசு ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்த நிலையில், 20 நிமிடங்கள் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், பின்பு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:போலீஸ் வாகனம் திருட்டு: கேசுவலாக திருடி சென்ற மர்ம நபர்... தீவிர விசாரணை!