நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான்(45). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒரு வழக்கில் பிணை பெற்று நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று(பிப்-7) வழக்கம்போல் காவல் நிலையம் செல்லும்போது அவரை ஒரு கும்பல் பின்தொடர்ந்து துரத்தியுள்ளது. அவர்களிடமிருந்து தப்பித்து கண்ணபிரான் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். அந்த அடையாளம் தெரியாத கும்பல் காவல் நிலையம் முன்பு கண்ணபிரானை நோக்கி திடீரென 2 குண்டுகளை வீசியது. அந்த குண்டு வெடித்ததில் கண்ணபிரானும், அருகில் இருந்தவர்களும் நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினர்.
அதே நேரத்தில் கண்ணபிரான் வீடு அருகேயும், சாலையோரம் இரண்டு குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். குண்டு ஆளில்லாத இடத்தில் விழுந்ததால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சதீஷ்குமார் ஆகியோர் காவல் நிலையம் சென்று விசாரித்தனர். பின்னர் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்துச் சென்றனர். விசாரணையில் அனைத்தும் நாட்டு வெடிகுண்டுகள் என்பது தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு இதுகுறித்து கண்ணபிரானிடம் உதவி ஆணையர் சதீஷ்குமார் விசாரணை மேற்கொண்டார். மேலும், காவல் நிலையம் முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய நபர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
சமீப காலமாக நாட்டு வெடிகுண்டு கலாசாரம் நெல்லையில் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக நெல்லை அருகே சில மாதங்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்நிலையங்கள் மீது குறிவைத்து வெடிகுண்டு வீசி செல்லும் சம்பவம் நெல்லை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.