திருநெல்வேலி: பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14ஆம்தேதி சனிக்கிழமை இரவில் திடீர் பாறைச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு தொழிலாளர்கள் கல்குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில் மறுநாள் 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முருகன் மற்றும் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். மாலையில் மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இரண்டாம் நாள் 16ஆம் தேதி காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடத் தொடங்கிய நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பின் அன்று இரவு முருகன் (லாரி கிளீனர்) சடலமாக மீட்கப்பட்டார். இதனால் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. தொடர்ந்து 17ஆம் தேதி மதியம் ஐந்தாவது நபரின் உடல், பாறை குவியலுக்குள் அடையாளம் காணப்பட்டது. ஆனால் பாறைகளுக்கு இடையில் அவரது உடல் சிக்கி இருந்ததாலும், இரவில் மீண்டும் சிறிய அளவில் பாறை சரிவு ஏற்பட்டதாலும், மூன்றாம் நாள் மீட்புப்பணிகள் நள்ளிரவில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 18ஆம் தேதி மதியம் பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டு மாலை 6.45 மணிக்கு 5வது நபர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் செல்வகுமார் என உறுதி செய்த பின் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.