திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்காக காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் கொடூரமான முறையில் பிடுங்குவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்டிங் பிளேயர் கொண்டு தங்கள் பற்களை பிடுங்கி எடுத்ததாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கடந்து மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முதல் நபராக லட்சுமி சங்கர் என்பவர் சார் ஆட்சியரிடம் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவர் போலீசார் தன்னை தாக்கவில்லை என்று விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை சூர்யா என்ற இளைஞர் சார் ஆட்சியரிடம் ஆஜரானார் அவர் கூறும்போது, போலீஸ் அதிகாரி தன் பற்களை பிடுங்கவில்லை கீழே விழுந்ததில் தான் பற்கள் உடைந்தது என்று கூறிய சம்பவம் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பதாக அமைந்தது.
இதற்கிடையில் புதன்கிழமை மாலை இச்சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய போலீஸ் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு போலீசார் மற்றும் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, மாரி, செல்லப்பா, சுபாஷ், ரூபன், மாரி ஆகிய ஆறு பேர் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் துணையோடு சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வந்தனர். ஆனால் ஆறு பேரில் சுபாஷ் தவிர மீதம் 5 பேருக்கு சம்மன் அனுப்பவில்லை என்றும் சம்மன் அனுப்பிய பிறகு விசாரணைக்கு வந்தால் போதும் என்று அவர்களை சார் ஆட்சியர் திருப்பி அனுப்பினார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த ஐந்து பேரும் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து மனுவாக எழுதி சார் ஆட்சியரிடம் கொடுத்து விட்டு வந்தனர். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”சாத்தான்குளம் சம்பவத்தை போன்று எங்களுக்கு நடந்துள்ளது. போலீஸ் அதிகாரி பல்வீர் சிங் கட்டிங் பிளேயரை கொண்டு பற்களை புடுங்கினார். நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல வகையில் எங்களுக்கு மிரட்டல் வருகிறது” என்று கூறினர்.