திருநெல்வேலி:அரிக்கொம்பன் என்றும் அழைக்கப்படும் காட்டு யானை, இடுக்கி மாவட்டம் வழியாக தேனி மாவட்டம் வனப் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. பின்னர், கம்பத்தில் பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் காட்டு யானை. கடந்த ஜுன் 5ஆம் தேதி நெல்லை மாவட்டம் மாஞ்சோலை அருகேயுள்ள கோதையாறு அடுத்த முத்துக்குழி வயல் அருகில் உள்ள குட்டியாறு டேம் பகுதியில் விடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் அரிக்கொம்பன் யானை அதன் வாழ்விடமான முத்துக்குழி வயல் பகுதியை விட்டு கீழே சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள மாஞ்சோலை அருகேயுள்ள நாலுமுக்கு, ஊத்து தேயிலை தோட்ட பகுதிகளில் முகாமிட்டு வாழை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி இருந்தது.
அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அரிக்கொம்பன் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடார் கருவி மூலமாக அதன் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். அப்பகுதியில் மழை, மேகமூட்டம் உள்ளிட்ட சூழல் மாற்றத்தால் சில நேரங்களில் அரிக்கொம்பனை கண்காணிப்பது வனத்துறையினருக்கு சவாலாக இருந்தது. மேலும், அரிக்கொம்பனுக்கு மஸ்து இருந்ததால் ஆக்ரோஷமாக இருப்பதாகவும் வனத்துறையினர் தரப்பில் தெரிவித்து இருந்தனர்.
இதனால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்து காணப்பட்ட நிலையில், சுமார் 80க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று அரிக்கொம்பன் நாலுமுக்கு பகுதியில் இருந்து தானாகவே இறங்கி அப்பர் கோதையாறு பகுதி நோக்கிச் சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது களக்காடு துணை இயக்குநர் ராமேஸ்வரன் தலைமையிலான சுமார் 40 வனத்துறையினர் அரிக்கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். அரிக்கொம்பனுக்கு ஏற்பட்ட மஸ்து நோயின் தாக்கமானது இன்னும் குறையவில்லை. இதனைத் தொடர்ந்து, வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினரும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அரிக்கொம்பன் யானை அதன் வாழ்விடத்தை விட்டு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தற்போது மீண்டும் அரிக்கொம்பன் யானை வந்த வழியே திரும்பி தனது வாழ்விடத்தை நோக்கி சென்றிருப்பதால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
இதையும் படிங்க: Arikomban: அரிக்கொம்பன் களமிறங்கிட்டான்... வனப்பகுதியில் இருந்து கீழே இறங்கியது எப்படி? - பரபரப்பு தகவல்!