திருநெல்வேலி: பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம், புன்னகாயல் கடலில் கலக்கும் தாமிரபரணி நதி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 180 கிலோமீட்டர் தூரம் பாய்ந்தோடி விவசாயம் மட்டுமின்றி 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்த நதியை தூய்மைப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தாமிரபரணி நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள், தாழி உள்ளிட்ட பழங்கால பொருள்கள் 3ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து தமிழர் நாகரிகத்தின் முன்னோடி தாமிரபரணி நாகரிகம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைமிகு தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் ‘தூய பொருநை நெல்லைக்கு பெருமை’ என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நதிக்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் பணி, தாமிரபரணி நதி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி உள்ளிட்டவைகள் செய்து வரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ‘நெகிழி இல்லா நெல்லை’ மற்றும் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணிக்காண விழிப்புணர்வு ஆகியவை ஒருங்கிணைக்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணியை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மஞ்சள் பை கைகளில் ஓவியம் வரைந்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து நெல்லை மாவட்டத்தின் சிறப்புகள், தாமிரபரணி நதியின் பெருமைகள் மற்றும் நெகிழியினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்களை வரைந்தனர்.