திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 160 சதவீதம் பெய்துள்ளது. ஜனவரி மாதமும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்திற்கு 445 கனஅடி தண்ணீரை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , “அரசின் உத்தரவுபடி பெருங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 23 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வினாடிக்கு 445 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 82 நாட்களுக்கு விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும். கடந்த மாதம் ஏற்பட்ட கனமழையால் 358 குளங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உடைப்பு ஏற்பட்டது. அந்த குளங்களில் ஏற்பட்ட உடைப்புகள் தற்காலிகமாக 100 சதவீதம் சரி செய்யப்பட்டு, அங்கு தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பதால், குளங்களுக்கு தண்ணீரை அனுப்பி நிரப்புவதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. தாமிரபரணி, நம்பியார், கருமேனியாறு இணைப்புத் திட்டத்தில் விமல் தேடி பகுதியில் நில எடுப்பு தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவை நீங்கலாக, பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளது.