திருநெல்வேலி:நெல்லையில் உள்ள முக்கிய சந்திப்புகளில் ஒன்று, குலவணிகர்புரம் ரயில்வே கேட். அம்பாசமுத்திரத்தில் இருந்து வரும் வாகனங்களும், நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் வாகனங்களும் இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் சென்று வருகின்றன. இதனால் இந்தப் பாதையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (அக்.7) அதிகாலை சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வநாயகம் என்பவர், குலவாணிக்கபுரம் ரயில்வே கேட் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, அம்பாசமுத்திரத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த வாகனம் அவர் மீது மோதி உள்ளது.
இதையும் படிங்க:நாயக்கனேரி விவகாரம்; திருபத்தூர் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை!
இதனால் அவர் குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் உள்ள தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் அறிந்து வந்த நெல்லை மாநகர போலீசார், தெய்வநாயகம் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக ஆம்புலன்சை வர வைத்தனர்.
இந்நிலையில், அவரது உடலை மீட்க ஆம்புலன்ஸில் வந்த ஜெயபிரகாஷின் வாகனம் மீது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார். இருவரின் உடல்களும் குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகில் கிடந்ததால், நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய ரயில்கள் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், குலவணிகர்புரம் ரயில்வே கேட் மிகக் குறுகலான பாதை என்பதாலும், அப்பகுதியில் முக்கிய அலுவலங்கள், கல்லூரிகள் இயங்குவதால் தொடர்ந்து விபத்து நடைபெறுவதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதினால், அதில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்து; மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழப்பு!