நெல்லை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலைய உள் வளாகத்தில் பேருந்தில் பயணித்தார். அப்போது, அதே பேருந்தில் பயணித்த அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் விதமாக கோஷமிட்டதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் செல்போனை தட்டிவிட்டுள்ளார். இது தொடர்பாக, ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (மார்ச்.15) நடைபெற்றது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர் அப்போது அனைவரும் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்காக மாவட்ட செயலாளர் மூலம் 100க்கும் மேற்பட்ட அதிமுக கொடிகள் கொண்டுவரப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே கட்சி கொடியை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய தச்சை கணேசராஜா, 'மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவரை அசிங்கப்படுத்தும் நோக்கில் நடந்து கொண்டார். அவதூறு பரப்பும் விதமாக, மொபைலில் வீடியோ, போட்டோ என எடுத்தவரை ஏன் இப்படி செய்றீங்க என்று கேட்ட பிஎஸ்ஓ (Personal Security Officer - PSO) தட்டிக்கேட்டுள்ளார். அவர் தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாக உள்ள அவர் ஒன்றும் தனிப்பட்டவர் கிடையாது; அவர் அந்த மொபலைப் பிடுங்கி விமான நிலைய அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்து நடந்தவற்றை விளக்கி கூறியுள்ளார்.
பின்னர், தனது செல்போனை அபகரித்து விட்டு சென்றதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுவொரு பொய்யான புகாராகும். இந்த பொய்யான புகாரில் உள்ள உண்மை தன்மையை விசாரிக்காமல், முன்னாள் முதலமைச்சராகவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமி மீது ஒரு அவதூறான புகாரை போட்டுள்ளனர். எனவே, இதற்கு கண்டனம் தெரிவிக்கவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும், இந்த வழக்கை ரத்து செய்யவில்லை எனில் பெரும் போராட்டங்கள் நடத்தப்படும்' என அவர் தெரிவித்தார்.