திருநெல்வேலி:'தமிழ்நாடு' என்றாலே பாரம்பரியம். 'பாரம்பரியம்' என்றாலே தமிழ்நாடு என்று சொல்லலாம். உணவில் தொடங்கி உடைகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, மருத்துவம், கலை, ஆன்மீகம், வாழ்க்கை முறை என அனைத்திலும் பாரம்பரியம் தமிழர்களின் பின்புலமாக அமைந்துள்ளது. அந்த வகையில், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா (Pongal Festival), ஆண்டுதோறும் தைத்திங்கள் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
நம் வாழ்விற்கு பெரிதும் உதவியாக இருக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறும் விழாதான், இந்தப் பொங்கல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாக, புகுந்த வீட்டிற்கு சென்ற மகளிற்கு 'பொங்கல் சீர்' கொடுக்கும் முறையும் பாரம்பரியமாக இன்றுவரை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் 'பொங்கல் சீர் கொடுக்கும் முறை' இன்றும் நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் பொங்கல் சீர் என்பதை 'பொங்கல் படி' என்பர். பேச்சுவழக்கில் அது பொங்கல் பொடி என்று மருவியுள்ளது. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற தங்களது மகள், எந்த குறையும் இல்லாமல் கடைசிவரை மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பொங்கல் சீர் கொடுப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது.
திருமணமான முதல் வருடத்தில் வரும் பொங்கலை, 'தலை பொங்கல்' என்று கூறி, பெற்றோர்கள் தங்கள் வசதிக்கேற்ப பொங்கல் சீர் கொடுத்து வருகின்றனர். சிலர் திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகள் வரையும், சிலர் கடைசி வரையிலும் இந்த பொங்கல் சீர் வழங்குவர். நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் பொங்கல் சீர் வழங்கும் நடைமுறை பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே களைக்கட்டத் தொடங்கும்.
புகுந்த வீட்டில் தன் மகள் பொங்கல் வைப்பதற்கு பித்தளை பானைகள், மண்பானைகள், கரண்டி, அரிசி, சர்க்கரை, கரும்பு, காய்கறிகள், கிழங்குகள், மஞ்சள் கொத்து, மசாலா சாமான்கள் எனப் பல வகையான பொருட்களை ஆசை ஆசையாக வாங்கி, அதை ஊரார் வேடிக்கைப் பார்க்கும் வகையில் வண்டி கட்டி, சம்பந்தி வீட்டுக்கு எடுத்துச் செல்வர். கிராமங்களில் இது வெறும் பாரம்பரியாகமாக மட்டுமல்லாமல் ஒருவித கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.
பொங்கல் சீர் வரிசை கொடுப்பதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே காய்கறிகள், கரும்புகள், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் விற்பனை களைக்கட்டும். அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார், வாழை இலை கட்டு, மஞ்சள் கொத்து, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைக்கட்டியுள்ளது.
இந்த மார்க்கெட்டிற்கு பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாமல் சீவலப்பேரி, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொங்கல் சீருக்கு தேவையான காய்கறிகள், கரும்பு, மசாலா சாமான்கள் போன்ற பொருட்களை வாங்கிச் சென்றனர். அதேசமயம், இந்த ஆண்டு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது பொங்கல் சீர் வாங்கும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் வரை ரூ.50-க்கு விற்பனையான கத்திரிக்காய் தற்போது, ரூ.50 விலை உயர்ந்து கிலோ ரூ.100-க்கும், கடந்த வாரம் ரூ.40-க்கு விற்பனையான கேரட் தற்போது கிலோ ரூ.60-க்கும் விற்பனையானது. சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சிறு கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.100-க்கு, கடந்த வாரம் ஒரு கட்டு ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட வாழை இலை, தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 30 எண்ணம் அடங்கிய ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.