திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா புதுக்குடியில் நெசவாளர்களால் பிரத்யேகமான தயாரிப்பாக நெய்யப்படும் செடி புட்டா கைத்தறி சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அறிவித்து உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்து வரும் செடி புட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் நெசவாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த அங்கீகாரத்தால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள எங்களின் வாழ்வாதாரம் இனி மேம்படுவதற்கான வழி பிறக்கும் என்கின்றனர்.
அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற நெசவு கிராமங்களின் பின்னணி:
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி தாலுகாவில் உள்ள புதுக்குடி, கிளாக்குளம், வீரவநல்லூர், வெள்ளாங்குழி என நான்கு கிராமங்களில் 1000 கைத்தறி கூடங்கள் வரை செயல்படுகின்றன. குறிப்பாக இதில் புதுக்குடி கிராமத்தில் தான் மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற செடி புட்டா சேலைகள் அதிக எண்ணிக்கையில் நெய்யப்படுகிறது. சுமார் 250 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கைத்தறி நெசவு கூடங்களை தங்களது வீட்டிற்குள்ளேயே அமைத்துள்ளனர்.
இந்த வீடுகள் அனைத்தும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தகரங்களாலும், ஓடுகளாலுமே வேயப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளும் தொழில் செய்யும் கைத்தறிக் கூடங்களும் ஒன்றாக நெய்யப்பட்டே காணப்படுகிறது. ஒரு அறையில் தறி, மறு அறையாக சமையலறை. தறிக்கு அருகிலேயே சாப்பாடு, தூக்கம், கனவு என வீடுகளே கைத்தறி கூடங்களாகவும், கைத்தறி கூடங்களே வீடுகளாகவும் என நெசவாளர் வாழ்க்கை சிறிய வட்டத்திற்குள்ளேயே அமைந்து உள்ளது.
வீட்டிற்குள் வெண்தேக்கு மரக்கம்புகளால் செய்யப்பட்டுள்ள தறிகளில் இடையே நூல்களை கோர்க்கும் வகையில் நான்கு கம்புகள் கீழே இரண்டு கால்களைக் கொண்டு மிதிக்கும் மர பெடல்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. தறி இயக்கத்தில் வலது கால் பெடலை மிதிக்கும் போது இடது புறம் கட்டப்பட்ட 2 கம்புடன் சேர்ந்த நூல் மேல் நோக்கி நகரும். பின்னர் இடது கால் பெடலை மிதிக்கும் போது வலது பக்கம் நூல் கட்டப்பட்ட கம்புகள் கீழ் நோக்கி நகரும்.
ஒரே நேரத்தில் இடப்புறமும், வலப்புறமும் நூல்களுடன் இணைக்கப்பட்டுள்ள மர குச்சிகளை அவ்வப்போது இரண்டு கைகளாலும் நகர்த்தி நெய்யும் போது நூல்களில் மேலும், கீழும், இடதும், வலதும் என நான்கு புறமும் கொடுக்கப்படும் இறுக்கத்தில் நூலானது சேலையாக மாறுகிறது. வயதை அடையாளப்படுத்தும் விதமாக நிறம் மாறி நிற்கும் தறிகள் போலவே, குறைந்தபட்ச பொருளாதார நிலையின் குறியீடாகவே நெசவாளர்கள் காட்சியளிக்கின்றனர்.
ஆனாலும் சிப்பிக்குள் தோன்றும் முத்து போல மிகவும் நேரமெடுத்து நெய்யும் சேலையில் தங்கள் திறமையை முழுமையாக காட்டி ஆடம்பரத்தின் உச்சமாக தயாரிக்கின்றனர். அந்த மெனக்கெடலின் பெயர் தான், புவிசார் குறியீட்டை பெற்றிருக்கும் செடி புட்டா சேலைகள். இந்த நெசவாளர்களுடன் பயணிக்கும் விதமாக அரசு சார்ந்து இயங்கும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மட்டும் 8 உள்ளது.
சங்கம் மூலம் தறி நெய்ய மூலப் பொருளான பாவு, நூல் தளவாட பொருட்களை வழங்கி விடுகின்றனர். நெய்யும் சேலைகளுக்கான கூலியும் சங்கம் மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இந்த சங்கத்தில் நெசவாளர் மூலம் கைத்தறி செய்து பெறப்படக்கூடிய சேலைகள் அனைத்தும் அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பெற்று அதன் விற்பனை கூடங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வட மாநில மக்களின் மிக விருப்பத்திற்குரிய சேலையாக செடி புட்டா சேலைகள் உள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள் அதிகளவில் வடமாநிலங்களுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
செடி புட்டா சேலைகள் வரலாறு:
கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படாத 1970 - 1975 காலக்கட்டத்தில் மதுரையை சேர்ந்த M.A ராமமூர்த்தி என்பவர் இந்த புதுக்குடி மக்களுக்கு செடி புட்டா சேலை நெய்வது குறித்து கற்றுக் கொடுத்துள்ளார். அவரால் தான் 50 ஆண்டுகளை கடந்து இன்றும் செடி புட்டா சேலைகள் இங்கு நெய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சேலைகளில் வண்ண வண்ண நிறங்களில் பூக்கள் நெய்யப்பட்டிருக்கும் இவை எம்ராய்டிரிங் என்று நினைத்தால் அதில் உண்மை அல்ல.
ஏனென்றால் இதில் தான் அதன் சிறப்பு அம்சமே உள்ளது. என்னவென்றால் கைத்தறி சேலைகளில் பச்சை, சிகப்பு, மஞ்சள், ரோஸ், ஆரஞ்சு என வண்ண வண்ண நூல்களை பயன்படுத்தி முந்தானை தொடங்கி சேலை முழுவதிலும் ஆங்காங்கே 15 பூக்கள் வரை நெசவு மூலமாகவே மிக நுணுக்கமாக வரைகின்றனர்.