திருநெல்வேலிமாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 32). இவரது மனைவி சுபத்ரா தேவி (வயது 24). இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சுபத்ரா தனது இரண்டாவது பிரசவத்திற்கு திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாவில் இருக்கும் அவரது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தாய் வீட்டில் இருந்த சுபத்ராவிற்கு இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திசையன்விளையில் உள்ள 33 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது கணவர் ராஜ் மற்றும் சித்தியுடன் பிரசவம் பார்க்க வந்துள்ளார், சுபத்ரா. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஒன்றரை மணி நேரமாக மருந்து, மாத்திரை, ஊசி என எந்த சிகிச்சையும் கொடுக்கப்படாமல் சுபத்ரா பிரசவ வலியில் அலறி துடித்துள்ளார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் ஒரு பயிற்சி செவிலியர் மற்றும் ஒரு தூய்மை பணியாளர் மட்டுமே இருந்த நிலையில், இங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, 108 ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ஒன்றரை மணி நேரமாக எந்த ஆம்புலன்ஸும் அங்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில், பிரசவ வலி அதிகமாகி அலறி துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர், வெகு நேரம் கழித்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், கர்ப்பிணி பெண்ணை தையல் போடுவதற்கான பிரசவ வார்டுக்கு ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் சென்றனர்.