தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடிகுண்டு வீசி காவலரை கொன்ற ரவுடிக்கு ஆதரவாக பேஸ்புக் பதிவு; ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் - Police suspended

திருநெல்வேலி: வெடிகுண்டு வீசி காவலரைக் கொன்ற ரவுடிக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்துக்களைப் பகிர்ந்த திருநெல்வேலி ஆயுதப்படை காவலரை இடைநீக்கம் செய்து நெல்லை மாநகர ஆணையர் தீபக் டாமோர் உத்தரவிட்டார்.

Police suspended
Police suspended

By

Published : Aug 22, 2020, 4:40 PM IST

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே தலைமறைவு குற்றவாளி துரைமுத்து என்பவரை பிடிக்கச் சென்ற இடத்தில் காவலர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம், காவல்துறை வட்டாரத்தைக் கதிகலங்கச் செய்துள்ளது.

கொலை வழக்கில் தொடர்புடைய துரைமுத்துவை தேடிவந்த தனிப்படை காவல்துறை வல்லநாடு அருகே காட்டுக்குள் பதுங்கியிருந்த நிலையில் அவரை சுற்றி வளைத்தது.

அப்போது தப்பிக்க முயன்ற துரைமுத்து தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளைக் காவலர் நோக்கி வீசி எறிந்தார்.

அதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து தலையில் பட்டதில் தலை சிதறி காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த குற்றவாளி துரைமுத்துவும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து துரைமுத்துவின் சகோதரன் சாமிநாதன் (24), கூட்டாளிகளான மணக்கரையைச் சேர்ந்த சிவராமலிங்கம் (29), சுடலைகண்ணன் (30) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியம் உடல் தமிழ்நாடு டிஜிபி திரிபாதி தலைமையில் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவுடி துரைமுத்துவின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு நண்பர்கள் ஊர்வலமாகச் சென்று அடக்கம் செய்தனர்.

அப்போது பெரிய அளவிலான அரிவாள், வீச்சரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரவுடிக்கான அடையாளங்கள் வெளிப்படுத்தும் வகையில் துரைமுத்துவின் உடலுடன் சேர்த்துப் புதைத்தனர். அதை வீடியோவாக எடுத்து முகநூல் வெளியிட்டுடிருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சர்ச்சை கிளம்பிய நிலையில் துரைமுத்துவின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வெள்ளப்பாண்டி என்பவர் முகநூலில் பதிவு செய்திருந்த அந்த பதிவை, நெல்லை மாநகர காவல் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர் சுடலைமுத்து என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த தகவல் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக காவலர் சுடலைமுத்துவை இடைநீக்கம் செய்து அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தார்.

சக காவலரைக் கொன்ற ரவுடியின் இறப்பிற்கு ஆதரவாக முகநூலில் பதிவைப் பகிர்ந்த இன்னொரு காவலரின் இந்தச் செயல் செயல் தமிழக காவல் துறைக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. துரைமுத்து தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவலர் சுடலைமுத்து இந்த செயலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடி துரைமுத்து: ஆதிமுதல் அந்தம்வரை!

ABOUT THE AUTHOR

...view details