திருநெல்வேலி:நாங்குநேரியில் சாதிய வன்மத்தால், பள்ளி மாணவரை சக மாணவரே பயரங்கமாக தாக்கிய சம்பவம் ஓய்வதற்குள், பட்டியலின இளைஞர்களை கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தி அவர்களின் மீது சிறுநீர் கழித்து சித்திரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் இதுபோன்ற சாதிய தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை தேவை எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் கழித்த கொடூரம்:மாநகரில் மணி மூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் கடந்த 30ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது அப்பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பலினர் இவ்விரு இளைஞர்களையும் திடீரென நிறுத்தி சாதிப் பெயரைக் கேட்டுள்ளனர். அதற்கு, பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என பதிலளித்த நிலையில், கையில் வைத்திருந்த வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. அதோடு, இரண்டு இளைஞர்களையும் நிர்வாணப்படுத்தி சாதிப் பெயரை சொல்லி திட்டியபடி அவர்களின் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.
இதனால், படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களிடமும் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவர்களின் செல்போனையும் பறிமுதல் செய்து அதோடு, ரூ.5 ஆயிரம், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை பறித்துள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக படுகாயமடைந்த இரண்டு பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
6 பேர் கைது:இந்த தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு பொன்மணி(25), சிவா(22) ராமர்(22), ஆயிரம்(19), நல்லமுத்து(21), லட்சுமணன்(20) ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர். ஆறு பேர் மீதும் கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்துதல், வழிபறியில் ஈடுபடுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் (பிசிஆர்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போதையில் இருந்த கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.