தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ விரைவில் 4000 மெகாவாட் சூரிய மின் ஒளித்திட்டம்’ - செந்தில் பாலாஜி அறிவிப்பு - 4000 MW solar power project soon to be inaugurated says minister Senthil Balaji

நெல்லை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 4000 மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி அறிவிப்பு
செந்தில் பாலாஜி

By

Published : Sep 11, 2021, 5:10 PM IST

Updated : Sep 11, 2021, 6:10 PM IST

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம் வளர்ச்சித் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், பெருமாள்புரம் தனியார் கல்லூரியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, பிற அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதுவரை இல்லாத வகையில் அறிவிப்புகள்...

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”நெல்லை, தென்காசி மாவட்ட மின்சார வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். நடைபெற்று முடிந்த மானியக் கோரிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பல அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கக்கூடிய வரலாற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இதுவரை 4,52,777 விவசாயிகள் 18 ஆண்டுகள் வரை பதிவு செய்து மின் இணைப்புக்காக காத்துள்ளனர். கடந்த ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

4000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி

சூரிய மின் சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.

முதல் கட்டமாக இந்த ஆண்டு 4,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு எந்தெந்த மாவட்டங்களில் இடங்கள் சாத்தியப்படும் என்பதைப் பொருத்து இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செந்தில் பாலாஜி அறிவிப்பு

அந்தந்த மாவட்டங்களிலேயே சூரிய மின் சக்தி தயாரிப்பு

இதுவரை சூரிய மின்திட்டம் சில மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது. முதன்முறையாக அந்தந்த மாவட்டங்களிலே சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மின் இழப்பு தடுக்கப்படும். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு என்னென்ன திட்டம் தேவை என்பதை அறிந்து முதலமைச்சர் பல உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

செந்தில் பாலாஜி

56,000 காலி மின்வாரிய பணியிடங்கள்

மின்வாரியத்தில் மொத்தம் உள்ள 1,46,000 பணியிடங்களில் 56,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இருக்கக்கூடிய அலுவலர்களை வைத்து தான் மின்வாரியம் செயல்பட்டு வருகிறது.

முதலில் களப்பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விரைவில் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்துறை செயல்பட்டதா என்ற கேள்விக்குறி எழுகிறது.

நிலக்கரி மாயம் குறித்து விசாரணை

நிலக்கரியை பொறுத்தவரை வட சென்னை அனல்மின் நிலையத்தில் 2,38,000 டன்களும், தூத்துக்குடியில் 71,000 டன்களும் காணாமல் போனது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலக்கரி இருப்பு மாயமானது தொடர்பாக விசாரணை இறுதி அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சாரத் துறை தொடர்பான புகார் தெரிவிப்பதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு 97 விழுக்காடு புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

நவீன மீட்டர் திட்டம் குறித்து அறிவித்துள்ளோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று, நான்காவது உலைகளில் உற்பத்தி செய்யபடும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு ஒதுக்குவது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு தெரிவிப்போம்” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க:’எங்களுக்கு பேச எதையும் மிச்சம் வைக்காமல் திமுக அறிவிப்பு வெளியிடுகிறது’ - சீமான் கலகல பேச்சு!

Last Updated : Sep 11, 2021, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details