தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்குநேரியில் மீண்டும் பரபரப்பு; பள்ளி சுவற்றில் சாதி வாசகங்கள் எழுதிய 4 மாணவர்கள் கைது! - nellai news

Nanguneri school students arrested: நாங்குநேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி சுவற்றில் சாதி சம்பந்தப்பட்ட அவதூறான வாசகங்களை எழுதிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 9:39 PM IST

திருநெல்வேலி: நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவனது தங்கை சக மாணவர்களால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. சாதி மோதல் காரணமாக அரங்கேறிய இச்சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.

மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை போன்ற பகுதிகளில் சாதி ரீதியாக பல்வேறு மோதல்கள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி புத்தகத்தைச் சுமக்கும் வயதில் மாணவர்களிடம் சாதி வன்மம் தலைதூக்கியது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. எனவே நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் செயல்களை போலீசார் மற்றும் ஆசிரியர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாங்குநேரியில் மேலும் ஒரு சம்பவமாக அங்குள்ள சங்க ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் சாதிய வன்மத்தோடு வகுப்பறை சுவற்றில் சில சாதி வாசகங்களை எழுதி வைத்ததாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நாங்குநேரி டிஎஸ்பி ராஜு, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, அவதூறாக எழுதப்பட்ட வாசகங்களை அழித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.

அதன் பின் அந்த 4 சிறுவர்களை திருநெல்வேலியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். சாதிய வன்மத்தால் உடன் படிக்கும் மாணவனையே வீடு புகுந்து வெட்டிய சம்பவத்தின் சூடு தணிவதற்குள், மேலும் அப்பகுதியில் ஒரு பள்ளியில் மாணவர்களிடையே சாதி வன்மம் வெளிப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்த சாத்தியமில்லை: சபாநாயகர் அப்பாவு

ABOUT THE AUTHOR

...view details