திருநெல்வேலி:ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பால் நிறுவனத்திலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தினந்தோறும் சுமார் 75 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாகப் பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்திலிருந்து தினசரி 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, இந்த ஆவின் நிறுவனத்திலிருந்து பால் பாக்கெட்டுகள் திருடப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
தினமும் பால் பாக்கெட் எடுத்துச் செல்லும் வாகனங்களில் திருடப்பட்ட பால் பாக்கெட்டுகளையும் ரகசியமாக வைத்து விற்கப்படுவதாகப் புகார்கள் குவியத் தொடங்கின. இந்த நிலையில், நேற்றிரவு (மார்ச்.10) ஆவின் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா மற்றும் சாந்தி ஆகியோர் தெற்கு பஜார் பகுதிக்குப் பால் கொண்டு செல்லும் வாகனத்தைப் பாதியில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின்போது, கணக்கில் வராத வழக்கத்தை விட 209 லிட்டர் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, அந்த பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் இவை குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன், ஆவின் நிர்வாகத்திற்கு நேரில் சென்று இது தொடர்பாக இரண்டு பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.