ஆடி அமாவசையின் சிறப்பு மற்றும் வழிபாட்டால் கிடைக்கும் பலன்களை விளக்குகிறார் பிரபல ஜோதிடர் திருநெல்வேலி:இந்துக்கள் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆண்டுதோறும் மற்றும் ஆண்டு முழுவதும் தமிழ் மாதங்களில் அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தாலும் ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை அன்று திதி கொடுப்பது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமாவாசை தினங்களில் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் பொதுமக்கள் திதி கொடுப்பார்கள். குறிப்பாக நெல்லையின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு, காவிரி ஆறு போன்ற தமிழகத்தில் பல்வேறு நீர் நிலைகளில் அமாவாசை தினத்தன்று திதி கொடுப்பார்கள்.
அதிலும் ஆடி அமாவாசை என்றால் லட்சக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள். அதேபோல் ஆடி அமாவாசை அன்று கோயில்களில் வழிபாடுகளும் விசேஷமாக இருக்கும். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழா ஆடி அமாவாசை அன்று நடைபெறும் பிரசித்தி பெற்ற இத்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள்.
இது போன்ற சிறப்புமிக்க ஆடி அமாவாசை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி வருகிறது. எனவே வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தில் பொதுமக்கள் திதி கொடுப்பதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மாதந்தோறும் வரும் அமாவாசைக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசைக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்தும் ஆடி அமாவாசையில் முன்னோர்களை வழிபடுவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்தும் நெல்லையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சங்கர சுப்பிரமணியனிடம் ஈடிவி பாரத் சார்பில் பிரத்யேக நேர்காணல் எடுக்கப்பட்டது.
அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்த கருத்துக்கள் வருமாறு,
ஆடி அமாவாசையின் சிறப்பு என்ன? “இந்த ஆண்டு ஆடி மாதம் இரண்டு அமாவாசை வருகிறது முதல் அமாவாசை ஆடி 1ஆம் தேதி முடிவடைந்து விட்டது. தொடர்ந்து வரும் 16ம் தேதி அமாவாசை வருகிறது. பொதுவாக ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் அதற்கு மலமாதம் என்று சொல்வார்கள். இது மிகவும் விசேஷமான மாசம்.
அன்றைய தினம் புதன்கிழமை என்பதால் புதன் கிரகத்திற்கு உண்டானது. இறந்தவர்கள் மற்றும் முன்னோர்களுக்கு, அமாவசை அன்று வழிபாடு நடைபெறும். அமாவாசை அன்று இறந்தவர்களை வணங்குவது மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதவிர ஆலய வழிபாடு செய்து கொள்ளலாம். பிற நல்ல காரியங்களில் ஈடுபடக்கூடாது.
சூரியனும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் சேரும் காலம் அமாவாசை. எனவே சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இருப்பதால் பூமியில் ஒரு வித ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அன்று பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை தரக்கூடிய நாளாக அமையும். ஈர்ப்பு சக்தி இருப்பதாலேயே அமாவாசை தினம், ஏரி குளம் போன்ற நீர் நிலைகளில் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
யாருக்கு தர்ப்பணம் செய்யலாம்: நீர் ஐம்பூதங்களில் ஒன்று. எள்ளு மகாவிஷ்ணுவின் அம்சம். நீர் ஆவியாவதை போல் நீங்கள் இறந்தவர்கள் பெயரை சொல்லி திதி கொடுக்கும் போது கண்டிப்பாக அவர்களால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆடி அமாவாசை தினத்தில் இறந்த தாய் தந்தைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு திதி கொடுக்கலாம். சாமி கும்பிடுகிறோமோ இல்லையோ கண்டிப்பாக இறந்தவர்களை கண்டிப்பாக வணங்க வேண்டும். அமாவாசை தினத்தில் இறந்தவர்களை வணங்குவதால் குலம் விருத்தியாகும்.
முதலில் மனிதன் பஞ்சபூதங்களை தான் வழிபட்டான் பின்னர் ஆதி காலத்தில் இறந்தவர்களை தான், முதலில் மனிதர்கள் வணங்கியுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு கோயில்களிலும் சித்தர்களின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. ஜீவசமாதி தான் கோவிலாக மாறியது எனவே அமாவாசை தினத்தன்று கோயிலில் வழிபாடு மேற்கொள்வதும் சிறப்பான ஒன்று.
பூஜை முறை:அமாவாசை அன்று இறந்தவர்களை வணங்கி விட்டு காகங்களுக்கு உணவு அளிக்கிறோம் அதே போல் பசுமாடுகளுக்கும் அமாவாசை தினத்தில் உணவு கொடுக்கலாம். பசு மாடுகளுக்கும் இறந்த ஆத்மாக்களுக்கும் தொடர்பு உண்டு அதனால் தான் கிரகப்பிரவேசம் செய்யும் போது முதலில் பசு மாடுகளை உள்ளே விடுகிறோம்.
ஒரு வீட்டில் ஆத்மாக்கள் இருந்தால் பசுமாடு உள்ளே நுழையாது. எனவே அமாவாசை அன்று பசுமாட்டுக்கு அகத்திக்கீரை மற்றும் வெள்ளை நிற எள்ளை உருண்டையாக கொடுக்கலாம். வரும் 16ம் தேதி ஆடி அமாவாசை வருகிறது அன்று பகல் முழுவதுமே அமாவாசை இருக்கிறது. இருப்பினும் குளிகை காலத்தில் எள்ளு போடும் வேலை செய்யக்கூடாது.
தேதி மற்றும் நேரம்:ஆகஸ்ட் 16ம் தேதி புதன் கிழமை குளிகை காலம் காலை 10:30 மணி முதல் பகல் 12 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் இல்லாமல் அதற்கு முன்பு அல்லது பின்பு தர்ப்பணம் பண்ணலாம். ஆடி அமாவாசை வழிபாடு மூலம் தீராத கடன்கள் தீரும். குலதெய்வம் அருள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாட்டின் 77 வது சுதந்திர தினம் - சென்னை விமான நிலையத்தில் 7அடுக்கு பாதுகாப்பு முறை அமல்!