திருநெல்வேலி:தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 46,020 திருக்கோயில்களிலும் இருக்கக்கூடிய அரிய ஓலைச் சுவடிகளையும் செப்புப்பட்டயங்களையும் அடையாளம் கண்டு பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் ஒரு குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் இதுவரை 232 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து 20 செப்புப்பட்டயங்களை அடையாளங்கண்டு மின்படியாக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், இக்குழுவினர் நெல்லையப்பர் கோயிலில் கள ஆய்வு செய்தனர். அந்த கள ஆய்வு செய்தபோது, கோயிலில் இருந்த செப்பேடு மற்றும் செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டன.
இது குறித்து சுவடித் திட்டப் பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சுவடியியல் துறை பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியனை இன்று (ஜூன் 12) தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது, 'நெல்லை கோயிலில் எனது தலைமையில் சுவடியியலாளர்கள் இரா.சண்முகம், க.சந்தியா, நா.நீலகண்டன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து கள ஆய்வு செய்தோம். அப்போது கோயிலில் 8-செப்புப்பட்டயங்களும், 2- செப்பேடுகளும் இருப்பதைக் கண்டறிந்தோம். செப்பேடுகளை ஆய்வு செய்த பொழுது அதில் கீழ்க்காணும் செய்திகள் இருந்தன.
சேரகுல ராம பாண்டியன்வழங்கிய தேவதானம்:முதல் செப்பேடு கி.பி.1299 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இச்செப்பேடு வஞ்சி சேரகுல ராமபாண்டியன் தனது படைத் தலைவர்களில் ஒருவரும் நாங்கீசுவரனேரி என்ற ஊரின் பொறுப்பாளருமான மாதேவன் சேரமான் பிள்ளையின் புதிய நிலங்களுக்கு வரி விதித்தது குறித்துப் பேசுகிறது. அதாவது, சேரமான் பிள்ளை பெற்றிருந்த ஊருக்கு நிரந்தர வரியாகக் கலி பணம் 880 நிர்ணயிக்கப்பட்டது. கிணறுகளுக்குத் தீர்வையாகப் பால் மரக்கால் படியால் 19 கோட்டை நெல்லும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிதாக குளம் வெட்டப்பட்டும் தரிசு நிலங்கள் திருத்தப்பட்டும் புதிய விளை நிலங்கள் உருவானதால் புதிய வரி விதிப்புச் செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது.
எனவே, புதிதாக உருவாக்கப்பட்ட விளைநிலங்களில் முதல் தர நிலங்களுக்கு வெங்கல ஓசைப்படியால் 414 கோட்டை நெல்லும் இரண்டாம் தர நிலங்களுக்கு செப்பு ஓசைப்படியால் 6 3/4 கோட்டை நெல்லும் வரியாக வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு வரியாக வழங்கப்படும் நெல்லில் 7 கோட்டை நெல்லை, திருநாகீசுரர் சிவகாமி அம்மன் கோயிலின் உதய மார்த்தாண்டன் கட்டளைக்கு தேவதானமாக வழங்க வேண்டும். மேலும், அவ்வூரில் உள்ள பூலாவுடையார் ஐயனார் கோயிலுக்கு அய்யன்பாத்தியாக 3/4 கோட்டைக்கு சற்று அதிகமான நெல் வழங்கிடவும் உத்தரவிட்ட செய்தியைச் செப்பேடு கூறுகிறது.
ஜெகவீர ராம பாண்டிய கட்டபொம்மன்வழங்கிய தர்ம சாசனம்:இரண்டாவது செப்பேடு எழுதப்பட்ட காலம் கி.பி.1772ஆம் ஆண்டு ஆகும். இச் செப்பேடு, ஆசூர் வள நாட்டைச் சேர்ந்த பாஞ்சாலங்குறிச்சியிலிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மநாயக்கரின் மகன் ஜெகவீர ராம பாண்டிய கட்டபொம்ம நாயக்கர் கீழ வேம்பு நாட்டில் திருநெல்வேலி தலத்தைச் சேர்ந்த முத்துலிங்கபட்டரின் புத்திரன் சிவஞான பட்டருக்கு தர்ம பிரதான சாசனம் எழுதிக் கொடுத்தது பற்றி பேசுகிறது.
அதில், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மனுக்கு உச்சிகாலத்தில் நடக்கும் பூசையில் அபிஷேகமும் நெய்வேதனமும் நடக்கும்படிக்கு திசைக்காவல் மானியமாகப் பெற்று வந்த 72 பொன்னினை வழங்கிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் கிடைத்த 5 பட்டயங்கள் கோயில்களுக்கு வழங்கியதானங்கள் பற்றி பேசுகின்றன. அவைகீழ்க்காணும் செய்திகளைத் தருகின்றன.
ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் பெயரில் வழங்கப்பட்ட நிலதானம்:முதல் செப்புப் பட்டயம் கி.பி.1682-ல் எழுதப்பட்டுள்ளது. மதுரை நாயக்க மன்னர்களான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மற்றும் திருவேங்கடநாதர் ஆகியோருக்குப் புண்ணியம் கிடைத்திட நெல்வேலிநாத சுவாமி வடிவம்மன் கோயிலில் உச்சிக் காலப் பூசை நடத்துவதற்கு குட நாட்டு வன்னிக்குட்டத்து தலைவர்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவி நிலதானம் வழங்கியுள்ள செய்தி கூறப்பட்டுள்ளது. பட்டயத்தில் தானம் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
விசுவநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர் பெயரில் வழங்கப்பட்ட நிலதானம்:இரண்டாவது செப்புப்பட்டயம் கி.பி.1695ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இச்செப்புப்பட்டயம் விசுவநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர், ரெங்க கிருட்டிண வீரப்ப நாயக்கர், விசயரெங்க சொக்கநாத நாயக்கர், தளவாய் நரசப்பைய்யா, திருவேங்கட னாதரய்யன், வடமலையப்ப பிள்ளை, அனந்த பற்பநாத பிள்ளை, அட்டவணை கரணிக்கப் பிள்ளை, காரியக்காரர் மக்கள் ஆகியோருக்குப் புண்ணியம் கிடைத்திட திருப்புடை மருதூர் நயினார் நாறும் பூங்கொண்டருளிய தம்பிரானாருக்கு நித்திய பூசை, மாத விழா, ஆட்டைத் திருநாள் கட்டளை, திருப்பணி, சந்தனாதித் தயில நிவேதனம் ஆகியவை முறையாக நடக்கும்படிக்குத் தேவதானப்பிரமாணம் ஏற்படுத்திட வீரகேரள முதலியார் கட்டளையிட்ட செய்தியினை கூறுகிறது.