தேனி: உத்தமபாளையம் அம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. அரிகேசநல்லூர் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் விஜய் என்ற வாத்து, சின்னமனூரில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் கடையில் வேலை பார்த்து வந்த சித்ராவை தினந்தோறும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் சித்ரா, விஜயின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், விஜய் அவரது பெரியம்மா லதா வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு விஜயின் பெரியம்மா லதா மற்றும் அவரது மகள் தமிழ்ச்செல்வி ஆகியோர் ஜாதி எல்லாம் பெரிய விஷயம் இல்லம்மா இந்த காலத்துல யாராவது ஜாதி பார்ப்பாங்களா எனக் கூறி உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது எங்களது பொறுப்பு நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம் என வாக்குறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது.
சுமார் ஐந்தரை ஆண்டுகளாக இருவரின் வீட்டிற்கு தெரிந்து காதலித்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்வார் என நினைத்து சித்ரா, விஜய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் உதவி பெற்று கொடுத்துள்ளார். மற்றும் தங்க பொருட்கள் வெள்ளி பொருட்கள் என சித்ராவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஜய் கறக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறதா? - பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுவது என்ன?
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக விஜய் வேறு ஒரு உறவுக்கார பெண்ணை காதலித்து ஊரை விட்டு ஓடியுள்ளார். அப்போதும் சித்ராவிடம் வேறொரு காரணத்திற்காக 2 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்து விஜயின் வீட்டிற்கு தேடிச்சென்ற போது சித்ராவின் சமுதாயத்தை சொல்லி மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விஜயின் உறவினர்களான லதா மற்றும் தமிழ்ச்செல்வி கீழ்தரமாக பேசியதாக கூறப்படுகிறது.