தேனி மாவட்ட பாஜக இளைஞரணியின் செயற்குழு கூட்டம் தேனியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஶ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். திமுக ஆட்சி வர வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் விரும்புவதாக கூறி வரும் ஸ்டாலின், தென்மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். ஏனெனில் திமுக வரலாற்றில் திருச்சிக்கு அடுத்துள்ள தென் மாவட்டங்களில் எந்த தலைவரும் போட்டியிட்டதாகத் தெரியவில்லை. இது தென் மாவட்டங்களில் அந்த கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பதை காட்டுகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் வேளாண், கல்வி உள்ளிட்ட சட்டங்களை திமுக எதிர்ப்பது யாரையோ திருப்திபடுத்துவதுபோல் உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில அரசால் நீதி விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் ராகுல்காந்தி அங்கு சென்று குழப்பம் ஏற்படுத்தியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு காங்கிரஸ், தமிழ்நாட்டிற்கு திமுக ஆகிய கட்சிகள் ஒரு சாபக்கேடு.