தேனி:கம்பம் அருகே கூடலூர் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து விவசாயிகளில் கோரிக்கையின்படி, 18 ஆம் கால்வாயில் பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டதோடு, பி.டி.ராஜன் கால்வாய் மற்றும் தந்தை பெரியாறு கால்வாயிலிருந்து நீர் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் 18ஆம் கால்வாயைத் திறக்க விவசாயிகள் அளித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், ஆணைப்படி 18ஆம் கால்வாயிலில் தண்ணீர் திறப்பதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், முல்லைப்பெரியாற்றில் இருந்து விநாடிக்கு 98 கன அடி நீர் வீதம் 30 நாட்களுக்கு நீரைத் திறந்து வைத்தார்.
இந்த நீர் திறப்பின் மூலம் தேவாரம் பகுதியில் 44 கண்மாய்கள் மூலம் 4614. 25 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் உத்தமபாளையம் தாலுகாவில் 21 கண்மாய்கள் வாயிலாக 2045.35 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் மற்றும் போடிநாயக்கனூர் தாலுகாவில் 23 கண்மாய்கள் வாயிலாக 2568.90 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.
குறிப்பாக, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், மீனாட்சிபுரம், டொம்புச்சேரி உள்ளிட்ட 13 ஊர்களுக்கு இந்த நீர் திறப்பு பயன்பெறும். இந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் 18ஆம் கால்வாய் விவசாய சங்கத்தினர், அரசு பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் திமுக நகர மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, பி.டி.ராஜன் கால்வாய் மற்றும் தந்தைப் பெரியாறு கால்வாயிலிருந்து பாசன நிலங்களான 5,146 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது. உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள சின்னமன்னுர், சீலையம்பட்டி, தர்மபுரி, கோவிந்தநகரம் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு நீர் செல்லும் வீதம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் மதகுகளை இயக்கி நீரைத் திறந்துவைத்தார்.
தேனி மாவட்டத்தின் முக்கிய கால்வாய்களுக்கு நீர் திறப்பு நிகழ்ச்சியில் பி.டி.ராசன், பெரியாறு கால்வாய் விவசாய சங்க விவசாயிகள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!