முல்லைப் பெரியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தேனி:தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது.
கடந்த வாரங்களில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்தது. தற்போது நீர் பிடிப்பு பகுதிகளான சிவகிரி மலைத்தொடர், முல்லை ஆறு, முல்லைக்கொடி, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு 2 ஆயிரத்து 400 கன அடிக்கு மேல் நீர் வரத்து உள்ளது.
வடகிழக்குப் பருவமழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று மாலை 4 மணி நிலவரப்படி 136அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே உள்ளது. இதன் காரணமாக கேரள மாநில முல்லைப் பெரியாற்றின் கரையோர பகுதிகளான இடுக்கி மாவட்டத்தில் உள்ள வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, ஐயப்பன் கோவில், சப்பாத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையினர் சார்பில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! கரையோர சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! போக்குவரத்திற்கு தடை..!